பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கரோனா அச்சம் காரணமாக, நடப்பு சாம்பியன் ரபேல் நடால், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உட்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் இந்தத் தொடரிலிருந்து விலகினர். இதனால், பல இளம் வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் தங்களது திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு உருவானது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மினரை காலிறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரர் டொமினிக் தீம் அசால்ட்டாக தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அவர் மினரை தோற்கடித்தார். டொமினிக் தீம் அடுத்ததாக அரையிறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை எதிர்கொள்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "போட்டி தொடங்கிய முதல் கணத்திலிருந்தே மிகப்பெரிய உணர்வு ஒன்று இருந்தது. தற்போது, ரோஜர், ரஃபா, நோவக் ஆகியோர் இல்லை. ஆனால் டேனியல், சாச்சா, பப்லோ ஆகியோர் உள்ளனர். அதுமட்டுமின்றி, மூன்று திறமைவாய்ந்த வீரர்கள் உள்ளனர். இதில், அனைவருக்கும் பட்டத்தை வெல்லும் திறமையும் தகுதியும் உள்ளது. நான் களத்திற்கு வந்துவிட்டால், மற்ற வீரர்கள் திறமைவாய்ந்தவர்கள் என்பதை மறந்து, என்னுடையை திறமையான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துவேன்" எனத் தெரிவித்தார்.