அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 2017இல் இறுதியாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற இவர், அதன்பின் கருவுற்றிருந்ததால் சில காலம் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, குழந்தை பெற்ற பின் மீண்டும் டென்னிஸ் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், செரீனாவால் ஒரு சாம்பியன் பட்டத்தையும் வெல்ல முடியாமல் போனது. குறிப்பாக, 2018, 2019 என அடுத்ததடுத்த அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப் போட்டிகளில் அவர் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில், நடப்பு சீசனுக்கான முதல் டென்னிஸ் தொடரான ஆக்லாந்து கிளாசிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அவர், சக நாட்டைச் சேர்ந்த ஜெஸ்ஸிக்கா பெகுலாவை எதிர்கொண்டார். ஆக்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜெஸ்ஸிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், மூன்று ஆண்டுகளுக்கு பின் அவர் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையான 43, 000 டாலரை ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நிவாரணம் அளிப்பதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவுக்கு பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த பஞ்ச் எப்படி இருக்கு! மைக் டைசனை இம்ப்ரஸ் செய்த செரீனா வில்லியம்ஸ்!