மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபுள்யுடிஏ) சார்பில் நடத்தப்படும் ஆக்லாந்து கிளாசிக் ஓபன் தொடர் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ், ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட்டை எதிர்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் செரீனா 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். இதுவரை மொத்தமாக 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா கடந்த மூன்று வருடங்களாக ஒரு பட்டத்தையும் கைப்பற்றாமல் உள்ளார். தற்போது அவர் இந்தத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பதால், செரீனா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஜூலியா கார்ஜெஸை 6-1, 6-4 என எளிதாக வீழ்த்திய டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி அரையிறுதிக்குள் காலடி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை, நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 12ஆம் தேதி தேர்வு!