2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் டென்னிஸ் நட்சத்திர வீரர்களான ஃபெடரர் - நடால் மோதவுள்ளப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் ஃபெடரர் வாவ்ரிங்ட்காவையும், நடால் நிஷிகோரியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனையடுத்து அரையிறுதியில் ஃபெடரர் - நடால் மோதப் போகிறார்கள் என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் இணையதளங்களில் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
களமிண் ஆடுகளத்தின் முடிசூடா மன்னன் என கொண்டாடப்படும் நடாலை எதிர்த்து களிமண் தரையில் ஃபெடரர் விளையாட வேண்டும். இதுகுறித்து ஃபெடரர் கூறுகையில், “நடாலை எதிர்த்து களிமண் ஆடுகளத்தில் ஆடினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நான் வலது கை வீரர் என்பதால் இடதுகை வீரர்களில் நடால் போன்றோரை எதிர்ப்பது கடினமான ஒன்று. நான் விளையாடிய வீரர்களிலேயே மிகவும் கடினமான வீரரை மீண்டும் ஒருமுறை எதிர்க்கப் போகிறேன்” என்று கூறுகிறார்.
மேலும், இதுவரை பிரெஞ்சு ஓபன் தொடரில் நடாலுடன் மோதிய ஐந்து போட்டிகளிலும் ஃபெடரர் தோல்வியடைந்துள்ளதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.