உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியன்று லண்டன் மாநகரில் மற்றொரு விளையாட்டான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியை உலகமே எதிர்பார்த்தது. ஏனென்றால் அந்தப் போட்டியில் டென்னிஸின் மாமன்னான ஃபெடரரும், டென்னிஸின் அசுரன் என அழைக்கப்படும் ஜோகோவிச்சும் களம் கண்டிருந்தனர். இதனால் டிவியில் கிரிக்கெட்டையும், செல்போனில் டென்னிஸையும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபெடரரும், நடாலும்தான் ஹீரோக்கள். டென்னிஸ் விளையாட்டே தங்களுக்கு மட்டுமே நேந்துவிடப்பட்டது என்பதைப் போல் தொடர்ந்து அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கோப்பைகளையும் கைப்பற்றி அசாதரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இவை அனைத்தும் ஜோகோவிச் என்ற வீரர் வெளிப்படும் வரைதான். இருமுனைப் போட்டியை கண்ட ரசிகர்கள், ஜோகோவிச்சின் வருகையும் அவர் வெளிப்படுத்திய தனித்துவமான ஆட்டமும் மும்முனை போட்டி வந்துவிட்டது என ரசிகர்களை நினைக்க வைத்தது.
டென்னிஸ் என்பது முழுக்க முழுக்க மன உறுதியை கேள்விக்குள்ளாக்கும் விளையாட்டு. இங்கே முதல் செட்டை கோட்டைவிட்டால் மீண்டு வருவதற்குள் எதிரி நம்முடைய மன உறுதியை எளிதாக மேலும் பலவீனமடைய செய்துவிடுவார். அந்த 78 அடி அங்குல டென்னிஸ் கோர்ட், நம் மன உறுதியை அதிகரிக்கவும் செய்யும், சுக்குநூறாக உடைத்துபோடவும் செய்யும்.
அப்படிப்பட்ட விளையாட்டில் நடாலும், ஃபெடரரும் கோலோச்சியிருந்த காலத்தில் ஜோகோவிச் வந்தார். நடாலுக்கு உடல் உழைப்பு பலம் என்றால், ஜோகோவிச்சிற்கு மன உறுதிதான் பலம். கிட்டத்தட்ட டிராவிட்டை போல் தடுப்பாட்டத்தின் மூலம் எதிரில் ஆடும் வீரர்களின் மன உறுதியை உடைத்து வெற்றி காண்பார். அதுதான் ஜோகோவிச்...!
செர்பியாவில் பிறந்த ஜோகோவிச், சிறு வயது முதலே போர்களுக்கு நடுவில் வாழ்ந்ததால், போராடுவதற்கு கற்றுகொண்டவர். போர் காலத்தில் சரியான தூக்கம் இருக்காது, சரியான சாப்பாடு கிடைக்காது, ஏன் குழுந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியாது.
இதனை குழந்தை பருவத்திலேயே சந்தித்த ஜோகோவிச், இவை அனைத்தையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டார். டென்னிஸ் கோர்ட்டில் விளையாட முடியாமல் ஸ்விம்மிங் ஃபூலில் டென்னிஸ் பயிற்சிகளை மேற்கொண்டார். அதுகுறித்து அவர் பேசியபோது, பள்ளிக்கு செல்லாத நாளில்தான் அதிகமான பயிற்சிகளை ஸ்விம்மிங் ஃபூலில் மேற்கொண்டேன் என்பார்.
போரின் சூழல் ஜோகோவிச்சின் மனதில் மிகப்பெரிய உறுதியை ஏற்படுத்தியது. அந்த சூழல்தான் ஜோகோவிச்சை போராடும் வீரனாக மாற்றியது. பாரம்பரியமான டென்னிஸ் குடும்பத்தில் ஜோகோவிச் பிறக்கவில்லை. ஏன் டென்னிஸ் ராக்கெட்டை அவர் குடும்பத்தில் யாரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் உலகின் நம்பர் 1 வீரனாக வரவேண்டும் என 7 வயதில் நினைத்ததை ஜோகோவிச் இன்று சாதித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஜோகோவிச் தொடர் வெற்றிகளைப் பெற்றாலும் ரசிகர்கள் ஃபெடரர், நடாலுக்குதான் தொடர்ந்து ஆதரவு அளித்தனர். அப்போது 2010ஆம் ஆண்டுவரை ஜோகோவிச் பெரிய தொடர்களில் வெற்றிகளை பெறாததும் அதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டில் எந்த பெரிய தொடர்களை வெல்லவில்லை என விமர்சிக்கப்பட்டாரோ, அடுத்தடுத்து மூன்று கிராண்ட்ஸ்லாம் தொடர்களான ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யு.எஸ். ஓபன் என கைப்பற்றி ஃபெடரர், நடால் ஆகியோரின் வெற்றிகளுக்கு சவாலளித்தார்.
இந்த வெற்றிகளுக்கு காரணமாக பேசப்பட்டது ஜோகோவிச்சின் மன வலிமை. மற்ற வீரர்களைப்போல் பாயிண்ட்டுக்காக ஆசைப்பட்டு தவறு செய்யும் வீரர் அல்ல அவர். எதிரியின் தவறுக்காக காத்திருப்பவர். 2011ஆம் ஆண்டில் ஜோகோவிச்சின் ஆட்டத்தைப் பார்த்து அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீரர் சாம்ப்ராஸ், ஜோகோவிச் வாழ்வின் மிகச்சிறந்த ஆட்டம் இந்த வருடத்தில்தான் வெளிவந்துள்ளது என்றார்.
தனது வெற்றிக்கு எதிராக நடால் வந்தால் என்ன... ஃபெடரர் வந்தால் என்ன.. ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்தோடு ஆடியதைப் போல் இருவரையும் ஒரு கைப் பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம். அதுவரை மட்டும் ரஃபேல் நடால் என்னும் மாவீரனை ஆறுமுறை இறுதிப் போட்டிகளில் வென்றார்.
ஆனால் ஜோகோவிச் உச்சம் எட்டியது என்னவோ 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில்தான். கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் டிஃபண்டிங் சாம்பியனாக களமிறங்கிய ஜோகோவிச்சை யாரும் பட்டத்தை தக்க வைப்பார் என எண்ணிப்பார்க்கவில்லை. ஏனென்றால், நடால் அந்த தொடரில் வெளிப்படுத்திய ஆட்டம் அப்படி.
உலகின் நம்பர் 1, நம்பர் 2 இடங்களில் உள்ள வீரர்கள் மோதும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த ஆட்டத்தின் முதல் சுற்றே டை ப்ரேக்கர் வரை சென்று நடால் கைப்பற்ற, ரசிகர்களின் கரகோஷம் நடாலுக்கு சாதகமாக சென்றது.
அடுத்த இரண்டு, மூன்றாவது சுற்றை ஜோகோ கைப்பற்றியபின், எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது நடால் என்னும் போர்வீரன் வெளியே வந்தான். நான்காவது செட்டில் நடால் ஆடிய ஆட்டம் வெறித்தனத்தின் உச்சம். நான்காவது செட்டைக் கைப்பற்றிவிட்டு நடால் வெற்றிபெற்றதற்கு இணையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடைசி செட் ஆட்டம் தொடர்ந்தது. வெற்றியாளனைத் தீர்மானிக்கும் ஆட்டம். ரசிகர்கள் ஒவ்வொருவரும் வரலாறு படைக்கப்பட்டு வருவதை கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.
ஆட்டம் டை ப்ரேக்கர் வரை சென்று ஜோகோவிச் வெற்றிபெற்றார். அந்த ஆட்டம் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இன்றுவரை அதிக நேரம் ஆடிய ஆட்டம் என்றால் அது இந்தப் போட்டிதான்.
அப்போது ஜோகோவிச் இளம் பருவத்தில் இருந்தார். டென்னிஸ் போட்டிகளில் இளம் பருவத்தில் ஆடும் வீரர் இவ்வகையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இயல்புதான்.
ஆனால் அதே ஆட்டம் தொடர்ந்தால் அது இயல்பல்ல. அது அவரது திறமையின் வெளிப்பாடு. அதுபோன்ற ஆட்டம்தான் சில நாட்களுக்கு முன்னதாக விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வெளிப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னதாக ரஃபேல் நடால், ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோரின் ஆட்டம் சிறந்ததாக இல்லாத நிலையில், செய்தியாளர்கள் நேரடியாகவே எப்போது ஓய்வு எனக் கேட்கத் தொடங்கினார்கள். ஆனால் கேட்ட கேள்விக்கு பதிலடியாக இந்த வருடத் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை ஜோகோவும், பிரெஞ்சு ஓபனை நடாலும், பல வருடங்களுக்கு பிறகு களிமண் தரை தொடரில் ஃபெடரரும் களமிறங்கி இளம் வீரர்களுக்கு ஆட்டம் காண்பித்தனர்.
அதனையடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடருக்கு மூன்று வீரர்களும் வருகிறார்கள். வழக்கம்போல் மூன்று வீரர்களின் ஆக்ரோஷத்தின் முன் எந்த வீரராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. அதிலும் மெக்ஸிகன் ஓபனில் பெற்ற தோல்விக்கு கிர்ஜியோஸை பழிவாங்கிவிட்டு நடால் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை பார்த்த ரசிகர்கள், கோப்பையை நடாலிடம் கொடுத்துவிடலாம் என கொண்டாடினர். ஆனால் புல்தரையின் மன்னன் ஃபெடரரிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தார். இறுதிப் போட்டியில் ஃபெடரர் - ஜோகோவிச்சை எதிர்கொள்ள வேண்டும்.
ஜோகோவிச்சை வீழ்த்திவிட்டு ஃபெடரர் வென்றுவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன் வெளிப்பாடாக ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ”ரோஜர், ரோஜர்” என்ற கோஷமே அதிகமாக காணப்பட்டது. நோவாக் என்று சத்தம் கூடக் கேட்கவில்லை. ஆனால் அதனை ஜோகோ கண்டுகொள்ளவே இல்லை. உலகின் மிகச்சிறந்த வீரரிடம் வித்தைகளை காட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே நோவாக்கிற்கு இருந்தது.
களமிறங்கிய முதல் செட்டிலேயே எந்த விதமான முயற்சிகளையும் செய்யாமல் ஃபெடரர் தவறு செய்வதற்காக காத்திருந்து, டை ப்ரேக்கர் வரை சென்ற செட்டை ஜோகோ கைப்பற்றினார். மைதானம் அமைதியானது. இரண்டாது செட்டை எளிதாக ஃபெடரர் கைப்பற்ற, மூன்றாவது செட்டை ஃபெடரர் கைப்பற்றினார். பின்னர் நான்காவது செட்டை ஜோகோ கைப்பற்ற ரசிகர்களைடையே பதற்றம் பற்றிக்கொண்டது. இரண்டு டை ப்ரேக்கர் செட்டையும் ஜோகோ கைப்பற்றினார். ஐந்தாவது செட் ஆட்டம் பரபரப்பின் உச்சானி கொம்பிற்கு சென்றது.
இரு வீரர்களும் தங்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்தினர். 37 வயதிலும் அசால்ட்டாக ஏஸ் பாயிண்ட்ஸ்களை ஃபெடரர் அடித்ததைப் பார்த்து, அசந்தபோயினர். ஐந்தாவது செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஆட, 12- 12 என்ற நிலையில் நிறுத்தப்பட்டு டென்னிஸின் புதிய விதியாக மூன்றாவது முறை டை ப்ரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது.
அதில் ஃபெடர்ரை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஜோகோவிக் விம்பிள்டன் தொடரின் சாம்பியனானார். வெற்றிபெற்றுவிட்டு புல்லை கிள்ளி தின்றுவிட்டு வான் நோக்கி கை காட்டிய நோவாக், இந்த வெற்றியின் மூலம் ரசிகர்களின் மனதினையும் வென்றெடுத்தார்.
வெற்றிபெற்று பின் கோப்பையை வாங்கிய நோவாக் பேசியபோது, ”இதுபோன்ற ஆட்டத்தில் ஒரு வெற்றியாளரை தீர்மானிப்பது வித்தியாசமாக உள்ளது. 37 வயதிலும் ஃபெடரர் ஆடிய ஆட்டம் உலகின் பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மாலும் செய்ய முடியும் என்ற உறுதியை கொடுத்துள்ளது. எனக்கும் ரோஜர்தான் இன்ஸ்பிரேஷன் ” என்றார்.
ஜோகோவிச்சின் இன்ஸ்டாகிராமில், காயத்திற்கு பிறகு இந்த வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் பயணிக்கும் எனது குடும்பத்தினருக்கு நன்றி. ரோஜர் ஃபெடரருடன் கோர்ட்டை பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத தருணம். தொடர்ந்து கனவு காண்பேன். இது போன்ற நிகழ்வுகளில் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த புல் இதற்கு முன் ருசித்தது போல் இல்லை. புதிதாக உள்ளது. ( grass tasted like never before)
ஆம், இந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடவில்லை. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்ததால் இந்த வெற்றி கொஞ்சம் ஸ்பெஷல்தான்.
ரோஜர் ஃபெடரர்தான் இனி வரபோகும் வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஆனால் நோவாக் ஜோகோவிச்சை கொண்டாட வேண்டிய நேரம் இது. வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளை பார்க்க வேண்டுமென்றால் அதிலும் நிச்சயம் இந்த இரண்டு போட்டிகளும் இருக்கும். நோவாக் ஜோகோவிச்சும் கொண்டாடப்பட வேண்டியவரே. ”ரோஜர், ரோஜர்” என எழுந்த குரல்கள் இனி ”நோவாக், நோவாக்” என கோஷம் எழுப்ப வேண்டும். வாழ்த்துகள் நோவாக்...!