உலகின் டாப் 8 வீரர்கள் போட்டியிடும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் முதல் செட்டை ரஃபேல் நடால் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெத்வதேவ் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பின்னர் நடைபெற்ற மூன்றாம் செட் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி நடாலிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் டேனில் மெத்வதேவ் 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் முன்னணி வீரர் ரஃபேல் நடாலை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று இரவு நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் இறுதிச்சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரியாவின் டோமினிக் தீமை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க:ஈஸ்ட் பெங்கால் அணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும்: ராய் கிருஷ்ணா