சர்வதேச டென்னிஸ் தொடரான டேவிஸ் கோப்பைத் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தொடர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியும் பங்கேற்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஹிரோன்மாய் சட்டர்ஜி கூறியதாவது, "இம்முறை பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கோப்பைத் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பிரத்யேக தொடர் இல்லை, உலகக்கோப்பை போன்ற தொடர் என்பதால் நிச்சயம் பங்கேற்க வேண்டும்.
மேலும் இந்தத் தொடரில் ஆறு வீரர்கள், ஒரு பயிற்சியாளர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியுடன் நானும் செல்கிறேன். அவர்களுக்கான நுழைவுஇசைவு (விசா) விண்ணப்பம் செய்யப்படும். இந்தியாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடைபெற்றபோது பாகிஸ்தான் அணியினர் நம் நாட்டிற்கு வந்தனர். அதுபோன்று தற்போது நாங்கள் அங்கு செல்கிறோம்" என்றார்.
முன்னதாக 1964ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைத் தொடரில் இந்திய அணி பங்கேற்றிருந்தது. அதன்பின் 55 ஆண்டுகள் கழித்து அங்கு நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 2007ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் தொடரில் பங்கேற்காமல் இருந்துவருகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் நீடித்துவரும் நிலையில் தற்போது இந்திய அணி அங்கு செல்வது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.