ஆண்களுக்கான செங்குடு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் கனடாவைச் சேர்ந்த 20 வயதே நிரம்பிய இளம் வீரர் டெனிஸ் ஷப்போவாலோவ் (33 ரேங்க்), லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த ரிச்சர்டு பெரன்கிஸை (63 ரேங்க்) எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட டெனிஸ், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் லித்துவேனியாவின் ரிச்சர்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அவர் நாளை நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில் அமெரிக்க வீரர் பிராட்லி க்ளானை எதிர்கொள்கிறார்.
ஏடிபி தரவரிசைப் பட்டியலில் 100 ரேங்களுக்குள் இடம்பெற்ற மிக இளம் வீரர் டெனிஸ் ஷப்போவாலோவ் என்பது குறிப்பிடத்தக்கது.