யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஃபெடரர், நடால் ஆகியோர் இத்தொடரில் பங்குபெறாத நிலையில், நட்சத்திர வீரர் ஜோகோவிச் தான் கோப்பையை வெல்லப் போகிறார் என தொடரின் ஆரம்பம் முதலே அனைவரும் கருதி வந்தனர். ஆனால் நோவாக் ஜோகோவிச் எதிர்பாராதவிதமாக போட்டி நடுவரைத் தாக்கியதன் விளைவாக, அவர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் யுஎஸ் ஓபன் ஆடவர் டென்னிஸ் தொடரில் புதிய கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் உருவாகப் போகிறார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செப்.12) நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதனைத் தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை எதிர்த்து ஆஸ்டிரிய டென்னிஸ் வீரர் டாமினிக் தீம் ஆடினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 என டாமினிக் தீம் எளிதாகக் கைப்பற்றினார். ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் தங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். இரு வீரர்களும் சரிசமமாக புள்ளிகளைப் பெற ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது.
டை ப்ரேக்கரில் டாமினிக் தீம் 9-7 என்ற கணக்கில் ஸ்வெரவை வீழ்த்தியதையடுத்து, 7-6 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார். இதன் பின்னர் நடந்த மூன்றாவது செட்டில் ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.
இந்த செட்டில் இரு வீரர்களும் 6-6 என்ற புள்ளிகளைப் பெற மீண்டும் ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. அதில் சிறப்பாக ஆடிய டாமினிக் தீம் 7-5 என்ற கணக்கில் டை ப்ரேக்கரில் வென்றார். இதனால் மூன்றாவது செட்டை 7-6 என்ற கணக்கில் டாமினிக் தீம் கைப்பற்றினார்.
இதன்மூலம் முதல்முறையாக யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப் போட்டியிலும் , இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இறுதிப் போட்டியிலும் டாமினிக் தீம் தோல்வியடைந்ததால், யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை டாமினிக் தீம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க: போட்டி நடுவரை தாக்கியதால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்!