உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரராக வலம் வருபவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். இவர் அண்மையில் தனது நாட்டிலும் குரோஷியாவிலும் அட்ரியா டூர் என்கிற டென்னிஸ் தொடரை நடத்தினார்.
இதில் பங்கேற்ற டிமிட்ரோவ், போர்னா கோரிக், விக்டோர் ட்ராய்க்கி ஆகியோருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து குரோஷியாவிலிருந்து தனது தாய் நாட்டிற்கு திரும்பிய ஜோகோவிச்சிரற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இந்நிலையில் அட்ரியா டூர் தொடரின் இயக்குநரும் இவரது பயிற்சியாளருமான இவானிசெவிக்கிற்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
"கடந்த 10 நாட்களாக எனக்கு இரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. ஆனால் இன்று எதிர்பாராவிதமாக எனக்கு கரோனா வைரஸ் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. எனக்கு வைரஸ் வந்ததற்கான அறிகுறி இல்லாததால் நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.
என்னை நானே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து தங்களது உடல்நிலை மீது கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.