கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிகவும் உயிரிய தொடரான விம்பிள்டன் தொடர் லண்டனில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனும் செர்பிய வீரருமான ஜோகோவிச் - சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் மோதினர்.
இரண்டு ஜாம்பவான்கள் நேருக்கு நேர் மோதுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் முதல் செட்டை டைபிரேக்கர் உதவியோடு 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற ஃபெடரர் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர், நடைபெற்ற மூன்றாவது செட்டும், நான்காவது செட்டும், முதல் இரண்டு செட்டின் ரிப்ளே போலவே இருந்தது. மூன்றாவது செட்டையும் ஜோகோவிச்சும், நான்காவது செட்டை ஃபெடரரும் வென்றனர். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் நடைபெற்றது.
இதில், இருவரும் ஜாம்பவான் வீரர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இருவரும் போட்டி போட்டு புள்ளிகளை மாறிமாறி பெற்றனர்.
இருவரும் தலா 12 புள்ளிகளை பெற்றதால், சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட ஜோகோவிச் 7-3 என்ற கணக்கில் வென்றதால், ஜோகோவிச் 13-12 என்ற கணக்கில் கடைசி செட்டை வென்றார். இந்த செட்டானது இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் வரை நீடித்தது.
இதன்மூலம், ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற கணக்கில் போராடி ஃபெடரரிடம் வெற்றி பெற்றார். இதன்மூலம் 1948ஆம் ஆண்டுக்கு பிறகு வீரர் ஒருவர் மேட்ச் பாய்ண்டை பாதுகாத்த பின் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
இப்போட்டி நான்கு மணிநேரம் 57 நிமிடங்கள் நீடித்ததால், விம்பிள்டன் தொடரிலேயே நீண்ட நிமிடங்கள் நீடித்த போட்டி என்ற சாதனையையும் பெற்றுள்ளது. இதில் இரண்டு மேட்ச் பாய்ண்டுகளை பாதுகாத்த ஜோகோவிச் இறுதி செட்டில் போராடி வெற்றி கண்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், ஃபெடரரை 4 மணி நேரம் 48 நிமிடங்கள் போராடி வீழ்த்தியதே நீண்ட நேரம் நீடித்த இறுதிப் போட்டியாக இருந்தது. மேலும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 2012, 2014 ஆண்டு ஜோகோவிச்சிடம் தோல்வியைத் தழுவிய ஃபெரடரர் தற்போது மூன்றாவது முறையாக கோப்பையை நூழிலையில் பறிகொடுத்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நடப்பு சாம்பியனான ஜோகோவிச், ஐந்தாவது முறையாக இத்தொடரில் பட்டம் வென்றுள்ளார். மேலும் நேற்றைய வெற்றியின் மூலம் தனது 16 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் அவர் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி வீரர்கள் பட்டியலில் பெடரர்(20), நடால்(16) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜோகோவிச் உள்ளார்.