கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றுப்போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜெர்மன் இளம் வீரர் அலெக்சாண்டர் ஜுவ்ரெவ்வை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். மேலும் அவர் 35ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜோகோவிச் இன்று நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் உலகின் நான்காம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொள்கிறார்.
மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் (2ஆவது ரேங்க்), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (3ஆவது ரேங்க்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு பின் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிப்போட்டிக்கு உலகின் முதல் நான்கு இடங்களில் உள்ள வீரர்கள் மோத உள்ளது இதுவே முதன்முறையாகும்.