உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் நடத்திய கண்காட்சி டென்னிஸ் தொடரில் பங்கேற்றபோது, கிகோர் டிமிட்ரோவ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். தற்போது கரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ள டிமிட்ரோவ், வெர்ஸ்ட்ரன் & சவுதர்ன் ஓபன் (Western & Southern Open) டென்னிஸ் தொடரில் பங்கேற்றார்.
அதன் முதல் சுற்றுப் போட்டியில் யூகோ உம்போர்ட்டை எதிர்த்து ஆடிய டிமிட்ரோவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இந்தப் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிமிட்டோவ், ''ஒரு முறை டென்னிஸ் ஆட முயற்சிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு தான் இங்கே வந்தேன். ஆனால் இப்போது இங்கே இருக்க முடிந்ததற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எனது ஆட்டத்தைப் பற்றி மறந்துவிடுங்கள். நான் டென்னிஸை பற்றி கூட பேசவில்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் வாரம் மிகவும் சவாலாக இருந்தது. முதலில் நடைபயிற்சி மேற்கொண்டேன். அப்போது என்னால் எந்தவித உடற்பயிற்சிகளையும் செய்ய முடியவில்லை. எந்த எடையையும் தூக்க முடியவில்லை. டென்னிஸ் ஆட முடியவில்லை. அதையடுத்து ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் மட்டும் பயிற்சி மேற்கொண்டேன். அனைவருக்கும் ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கரோனாவின் பற்றி தீவிரம் பற்றி அறியாமல் இருக்காதீர்கள்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு உடல் வலுவுடன் இருந்தாலும், எவ்வளவு நல்ல உணவுகளை எடுத்துக் கொண்டாலும் சரி... கரோனாவுக்கு முன்னால் அனைவரும் சமம் தான். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்'' என்றார்.
தொடர்ந்து மகளிர் பிரிவில் நடந்த போட்டிகளில் கரோனா ப்ளிஸ்கோவா, சோஃபியா கெனின், ஸ்டீஃபன்ஸ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இந்த தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடக்கவுள்ள யுஎஸ் ஓபன் தொடருக்கு முன்னதாக நடந்து வருவதால், டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சச்சினின் சாதனையை கோலி அசால்ட்டாக முறியடிப்பார்: இர்ஃபான் பதான்!