பிரேசில் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் டியாகோ மாடோஸ் (31). இவர் கடந்த சில ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்திறனைதான் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டில் பிரேசில், இலங்கை, ஈக்வேடார், போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஐடிஎஃப் அளவிலான 10 டென்னிஸ் போட்டிகளில் இவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டிகளில் இவர் திட்டமிடப்பட்டு தோல்வியடைந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணையின் போது இவர் தனது வருமனாம் குறித்த பதிவுகளையும் வழங்கத் தவறினார் மற்றும் தடயவியல் பரிசோதனையில் தனது மொபைல் ஃபோன்களை சமர்ப்பிக்கவும் மறுப்புத் தெரிவித்தார்.
தற்போது இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதால், இவருக்கு டென்னிஸ் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த குற்றத்திற்கு 125,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 89 லட்சம் ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஈக்வேடார் தொடரில் ஊதியமாகப் பெற்ற 12,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய்) திருப்பி தருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, இவர் 2018 டிசம்பரில் இவர் டென்னிஸ் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.