டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. இதில், ஏடிபி வெளியிட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதில், நான்காவது இடத்திலிருந்து ஆஸ்திரிய வீரர் டாமினிக் தீம், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரைப் பின்னுக்குத் தள்ளி தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். தனது டென்னிஸ் பயணத்தில் டாமினிக் தீம் முதன்முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் டாமினிக் தீம் இறுதிச் சுற்றுவரை சென்றிருந்தார். காயம் காரணமாக ஃபெடரர் சிகிச்சைப் பெற்றுவருவதால் அவர் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல், டபுள்யூ.டி.ஏ. வெளியிட்ட மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில் எட்டாவது இடத்திலிருந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம், ஒன்பதாவது இடத்திலிருந்த பெலிண்டா பென்சிக், எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி முதலிடத்திலும், ரோமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலப் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்ற நடால்!