2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் முன்னாள் சாம்பியன் ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா, 19ஆம் நிலை வீராங்கனையும் குரோஷியாவைச் சேர்ந்த டோன்னா வெகிக்குடன் (Donna Vekic) பலப்பரீட்சை நடத்தினார்.
முதல் செட்டில் 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஷரபோவா இரண்டாவது செட்டில் வெற்றிபெற்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டோன்னா வெகிக்கின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது செட்டையும் அவர் 4-6 என்ற கணக்கில் இழந்தார். இதனால், ஷரபோவா 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்தத் தோல்வியின் மூலம் ஷரபோவா தொடர்ந்து மூன்றாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். முன்னதாக அவர் கடந்த ஆண்டின் அமெரிக்க ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டினார். 32 வயதான ஷரபோவா இதுவரை மகளிர் ஒற்றையர் பிரிவில் ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவர் 2017க்கு பின் எந்த ஒரு பட்டத்தையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆடவேண்டிய டென்னிஸ் இன்னும் அதிகமுள்ளது - சானியா மிர்சா