மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்று போட்டி இன்று (பிப்.21) நடைபெற்றது. இப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிகணக்கில் போராடி கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 6-2, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது, மூன்றாவது செட்களைக் கைப்பற்றி மெத்வதேவ்விற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் நோவாக் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்குகளில் டேனில் மெத்வதேவ்வை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 9ஆவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கியுள்ளார். முன்னதாக 2008, 2011,2012,2013, 2015, 2016, 2019,2020 ஆகிய ஆண்டுகளில் நோவாக் ஜோகோவிச் இத்தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் தனது 18ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நோவாக் ஜோகோவிச்சிற்கு கோப்பையும், 15 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த டேனில் மெத்வதேவ்விற்கு பரிசுத்தொகையாக 8 கோடியே 56 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: டோடிக், போலசெக் இணை சாம்பியன்!