வருடந்தோறும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடராக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுவது வழக்கம். அதன் படின் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் சோஃபியா கெனினும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில் வருகிற 2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நெருங்கி வரும் சூழலில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடருக்கான போட்டி ஆட்டவணை மற்றும் தேதி ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. மேலும் இந்தாண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாங்கள் டென்னிஸ் தொடரை நடத்துவதற்கு எங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறோம்.
மேலும் போட்டி ஏற்பாடுகள் குறித்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் உள்ளூர் மருத்துவ குழுவின் ஆலோசனைகளையும் நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். மேலும் இப்போட்டிகளைக் காண பார்வையாளர்களை அனுமதிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது ஆகியவற்றையும் நான்கள் ஆலோசித்து வருகிறோம்.
அதனால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான தேதி மற்றும் டிக்கெட் விற்பனை, பார்வையாளர்களின் அளவு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றை இன்னும் ஓரிரு வாரங்களில் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிர்வாகப் பிழையால் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு 18 லட்சம் அபராதம்!