இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆடவர்களுக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் நேற்று தொடங்கியது. உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் இந்தத் தொடரில் வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜோர்ன் போர்க் குரூப்பில்...
- ஜோகோவிச் (செர்பியா),
- ரோஜர் ஃபெடரர் (சுவிஸ்),
- டோம்னிக் தீம் (ஆஸ்திரியா),
- மேட்டியோ பெரெட்டினி (இத்தாலி)
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மற்றொரு குரூப்பான ஆண்டர் அகாஸியில்...
- நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்,
- நடப்புச் சாம்பியன் அலெக்சாண்டர் ஜுவ்ரெவ் (ஜெர்மனி),
- ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்),
- டேனி மெட்வதேவ் (ரஷ்யா)
ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஃபெரரருக்கு அதிர்ச்சியளித்த தீம்
இதனிடையே இன்று ஜோர்ன் போர்க் குரூப்பில் நடைபெற்ற போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரியாவின் டோம்னிக் தீமை எதிர்கொண்டார். இப்போட்டியில் முதல் செட்டில் கடுமையாகக் போராடிய ஃபெரடரர் ஒரு கட்டத்தில் 5-5 என சமநிலை வகித்தார்.
ஆனால் தொடர்ந்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய டோம்னிக் தீம் 7-5 என அந்த செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 7-5 என கைப்பற்றிய தீம், அனுபவ வீரர் ஃபெரடருக்கு அதிர்ச்சியளித்தார்.
பெரெட்டினியை பெரட்டியெடுத்த ஜோகோவிச்
முன்னதாக இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நோவாக் ஜோகோவிச் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினார்.
ஃபெடரர் vs பெரெட்டினி
நாளை நடைபெறும் குரூப் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினின் மேட்டியோ பெரெட்டினியை ஃபெடரர் எதிர்கொள்கிறார். கடந்தாண்டும் ஏடிபி ஃபைனல்ஸ் தொடரின் முதல் சுற்றில் ஃபெடரர் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.