அபுதாபி: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மொயின் - மலான் இணை
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மொயின் அலி 51 ரன்களையும், டேவிட் மலான் 41 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் டிம் சௌதி, இஷ் சோதி, ஜிம்மி நீஷம், ஆடம் மில்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
167 இலக்கு
167 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே மார்டின் குப்தில் 4 ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி ஆட்டம் கண்டது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கால்வே - மிட்செல் ஆகியோர் மிக நிதானமாக விளையாடி ரன்களை சீராக உயர்த்தினர்.
நீஷமின் அதிரடி
இருவரின் பார்ட்னர்ஷிப் 82 ரன்களை எட்டியபோது கன்வே 46 ரன்களுக்கு லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிலிப்ஸ் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதன் பின்னர் வந்த ஜிம்மி நீஷம் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 27 ரன்களை குவித்து ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி பெவிலியன் திரும்பினார். இதில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். இதனால் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 19ஆவது கிறிஸ் வோக்ஸ் வீசினார்.
மிரளவைத்த மிட்செல்
அந்த ஓவரில் மிட்செல் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரி என விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்ந மிட்செல் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 72 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கு, நியூசிலாந்து முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
அடுத்தது யார்?
T20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) மோதுகின்றன.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை