அமெரிக்கா: உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று (ஜூலை 15) தொடங்கிய நிலையில், வரும் ஜூலை 24ஆம் தேதி வரை அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெறுகிறது. நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூலை 16) நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் ஜெஸ்வின் ஆல்ட்ரின் மற்றும் முகமது அனீஸ் யாஹியா ஆகியோர் ஏ-பிரிவிலும், முரளி ஸ்ரீசங்கர் பி-பிரிவில் இடம்பெற்றிருந்தார்.
இறுதிப்போட்டிக்கு தகுதிபெற அனைவருக்கும் 3 வாய்ப்புகள் கொடுக்கப்படும். ஒன்று, 8.15 மீட்டர் இலக்கை எட்ட வேண்டும் அல்லது கொடுக்கப்படும் வாய்ப்புகளில் சிறப்பாக வீசியவர்களை கொண்டு இறுதிப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் ஆடவர்: இதில், ஸ்ரீசங்கர், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 8.15 மீட்டரை தாண்டாவிட்டாலும், கொடுக்கப்பட்ட 3 வாய்ப்புகளில் அதிகபட்சமாக 8 மீட்டரை தாண்டினார். இதனால், பி-பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக, ஏழாவது இடத்தை பிடித்தார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பாக தகுதிபெறும் முதல் ஆடவர் இவர்தான். 2003இல் பாரீஸில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பாக நீளம் தாண்டுதலில் பங்கேற்ற அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
ஏ-பிரிவில் இடம்பெற்றிருந்த ஆல்ட்ரின் 7.79 மீட்டரையும், அனீஸ் 7.73 மீட்டரையும் தாண்டி முறையே 9ஆவது மற்றும் 11ஆவது இடத்தை பிடித்தனர். இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை.
தஜிந்தர்பால் விலகல்: மேலும், 3000 மீட்டர் தடையோட்டத்திலும் இந்தியாவைச் சேர்ந்த அவினாஷ் சேபிள் தகுதிபெற்றுள்ளார். இந்தியாவின் குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னரே, காயத்தால் வலி இருந்தாலும் அமெரிக்கா சென்ற அவர், பயிற்சிக்கு பின்னரும் வலி குறையாததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும், 20 கி.மீ நடையோட்ட போட்டியின் ஆடவர் பிரிவில் சஞ்சய் குமாரும், மகளிர் பிரிவில் பிரியங்கா கோஸ்வாமியும் சரியாக சோபிக்காததால் தொடரில் இருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: 'ரூ.10 ஆயிரத்திற்கு பெட்ரோல்... 2 நாள்கள் கூட தாங்காது...' - கதறும் இலங்கை கிரிக்கெட் வீரர்