ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக இந்தப் பந்தயம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரியாவில் ரசிகர்களின்றி பந்தயங்கள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு முழுவதும் மெர்சிடிஸ் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று (டிச. 13) இந்தாண்டிற்கான கடைசி ஃபார்முலா ஒன் பந்தயம் ஐக்கிய அமீரக தலைநகர் அபு தாபியில் நடைபெற்றது. இதில் அட்டகாசமாக காரை ஓட்டிய ரெட்புல் அணியைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பான் வெற்றிபெற்றார்.
மேலும், மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன், வால்டேரி போடாஸ் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற 17 பந்தயங்களில் மெர்சிடிஸ் அணியைச் சாராத ஒருவர் பந்தயத்தில் வெற்றிபெறுவது இது நான்காவது முறையாகும்.
இருப்பினும், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் எவ்வித பெரிய மாற்றமும் நிகழவில்லை. வீரர்களுக்கான புள்ளிப்பட்டியலில், 347 புள்ளிகளுடன் லீவிஸ் ஹேமில்டன் முதலிடத்தில் உள்ளார். அவரது சக வீரரான வால்டேரி போடாஸ் இரண்டாவது இடத்திலும், ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல அணிகளுக்கான பட்டியலில் மெர்சிடிஸ் முதலிடத்திலும் ரெட்புல் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேலும், அபுதாபி பந்தயத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மெக்லரென் அணி, ரேசிங் பாயிண்ட் அணியைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
2021ஆம் ஆண்டிற்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு மார்ச் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்