ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட ஜாம்பவான்
அமெரிக்காவின், நியூயார்க் கூடைப்பந்தாட்டக் கழகமான லாக்கர்ஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கோப் பிரைன்ட், அவரது மகள் ஜியானா பிரைன்ட் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இத்தகவலை நியூயார்க் தீயணைப்புத் துறையினரும் உறுதிப்படுத்தினர்.
இத்தகவலறிந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த பிரபலங்களும், விளையாட்டுப் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
தங்கம் வென்ற அபூர்வி சண்டிலா
ஜனவரி மாதம் ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் மேடன் துப்பாக்கிச் சுடுதல் தொடர் நடைபெற்றது. இதில் மகளிர் தனிநபர் 10.மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா 251.4 புள்ளிகளைப் பெற்று, தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
இதேபோல் நடைபெற்ற ஆடவர் தனி நபருக்கான 10 மீ ஏர் ஃரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249.7 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை 2021ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
அண்டர்டேக்கர் ஓய்வு
உலகப் பொழுதுபோக்கு மல்யுத்தம் என்றழைக்கப்படும் WWE - விளையாட்டில் மூன்று தசாப்தங்களாக கொடிகட்டிப் பறந்தவர் த அண்டர்டேக்கர். இவர் கடந்த ஜூன் மாதம் WWE போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இது குறித்த அறிவிப்பை அவர், தன்னைப் பற்றிய 'அண்டர்டேக்கர்: த ஃபைனல் ரைடு' ஆவணப்படத்தின் கடைசி அத்தியாயத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ரஸ்ஸல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில்
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வங்கதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு ஆன்லைன் மூலமாக 'ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் 2020' என்ற போட்டி அக்டோபர் மாதம் தொடங்கியது.
இந்தியா சார்பாக, மகளிர் பிரிவில் பங்கேற்ற இளவேனில் வாலறிவன் 627.5 புள்ளிகளைப் பெற்று, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மேலும் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அவருக்குப் பரிசுத்தொகையாக ரூ.74 ஆயிரம் (1000 டாலர்கள்) வழங்கப்பட்டது.
சாதனைப் படைத்த ஹேமில்டன்
பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 12ஆவது போட்டி அக்டோபர் மாதம் போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்றது. விறுவிறுப்பாகச் சென்ற இப்போட்டியில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன் முதல் இடத்தைப் பெற்றார்.
இதன்மூலம் பார்முலா ஒன் கார் பந்தயங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்ற மைக்கேல் ஷூமேக்கரின் (91 வெற்றி) சாதனையை, லீவிஸ் ஹேமில்டன் (92 வெற்றி) அவர் முறியடித்து புதிய உலகச் சாதனையைப் படைத்தார்.
உலக டிரையத்லான் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இந்தியர் தேர்வு
உலக டிரையத்லான் கூட்டமைப்பு சார்பில் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான 33ஆவது காங்கிரஸ் தேர்தல் முதல் முறையாக காணொலி மூலம் நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இதில் உலக டிரையலத்லான் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக ஐந்து பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் என். ராமச்சந்திரனும் ஒருவராக இடம்பெற்றார்.
இதன்மூலம் இந்தியா சார்பில் உலக டிரையத்லான் தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இணைந்த முதல் நபர் என்ற பெருமையையும் படைத்தார். இவர் இதற்கு முன்னதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு டிரையத்லான் சங்கத்தின் தலைவராகவும் பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் பிரேக் டான்ஸ்
2024ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ளது. பாரிஸ் நகரில் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக நடனம், விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக் டான்ஸ் போட்டியை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு டிசம்பர் மாதம் சேர்த்தது.
பஜ்ரங் புனியா, இளவேனில் வாலறிவனுக்கு இந்திய விளையாட்டு விருதுகள்
நாட்டின் விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்படும் வீரர்/வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) சார்பாக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி 2019-2020 சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு 2020ஆம் ஆண்டுக்கான FICCI-யின் இந்திய விளையாட்டு விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:லாலிகா: ரியல் மாட்ரிட் - எல்ச் எஃப்சி ஆட்டம் டிரா!