ஃபார்முலா ஒன் கார் பந்தயமானது ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்தச் சுற்று பந்தயம் இன்று ஹங்கேரியில் உள்ள ரேஸ் டிராக்கில் நடைபெறுகிறது.
இந்த ரேஸின் போல்-பொஷிசன்களுக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. பெரும்பாலும் இந்த தகுதிச் சுற்றுப்போட்டிகளில் உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டனே முதலிடம் பிடிப்பார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நேற்றைய தகுதிச்சுற்றின் முடிவில் கார்பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார். ரெட்புல் அணியில் உள்ள இவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 14.572 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார்.
அவருக்கு அடுத்ததாக வந்த மெர்சிடிஸ் ஓட்டுநர்களான போட்டாஸ், ஹாமில்டன் ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
நேற்றைய பந்தயத்தில் முதலிடம் பிடித்ததன் மூலம் மேக் வெர்ஸ்டாப்பன், தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த 100ஆவது ஓட்டுநர் என்ற சாதனையை படைத்தார். 21 வயதே நிரம்பியுள்ள வெர்ஸ்டாப்பன் தனது 94ஆவது பந்தயத்தில் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இன்று நடைபெறும் பந்தயத்தில் அவர் தற்போதைய உலக சாம்பியன் ஹாமில்டனுக்கு இணையாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.