நாட்டில் உள்ள மூலைமுடுக்குகளில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் உடற்தகுதி அன்றாட வாழ்வியலாக மாறுவதற்கு விளையாட்டு ஆசிரியர்கள், சமுதாய பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்கு முக்கியமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு 25 நாள்களுக்கான கேலோ இந்தியா பயிற்சியாளர்கள் முன்னேற்ற நிகழ்ச்சி மத்திட அரசு சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ''முன்னதாக பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது. விளையாட்டுத் துறையின் முக்கிய நாடாக இந்திய இருக்க வேண்டுமானால், விளையாட்டை ஒரு கலாச்சாரமாக மாற்ற வேண்டும். அதற்கு குழந்தைகளின் வாழ்வியலில் விளையாட்டு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். இதற்கு விளையாட்டு பயிற்சியாளர்கள், ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. விளையாட்டு கலாச்சாரமாக இருக்கும்போது இந்தியாவில் சாம்பியன்கள் உருவாகுவார்கள்.
பிரதமரால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா நிகழ்வு, இந்திய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.