கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம், கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரியாவில் தொடங்கியது.
தற்போது நிறைவடைந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன், 63 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்றுவரும் 36 வயதான இவரிடம், ஓய்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த லீவிஸ் ஹேமில்டன், "இப்போது இருக்கும் ஃபார்மையே தொடர விரும்புகிறேன். ஆனால் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி ஒரு கட்டத்தில் சிறப்பான திறனை நம்மால் வெளிப்படுத்த முடியாமல் போகும்.
என்னால் முடிந்தவரை பார்முலா ஒன் கார் பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்கவே நான் விரும்புகிறேன். குறைந்தபட்சம் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கார் பந்தயத்தில் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, இவரின் சொந்த நாடான பிரிட்டனில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபெராரி அணியிலிருந்து வெளியேறும் செபாஸ்டியன் வெட்டல்!