இந்தியாவில் திறமையானவர்கள் கொட்டிக்கிடந்தாலும், அவர்களை கண்டறிவது சற்று கடினமாகவே இருக்கிறது. ஆனால், தற்போதைய நவீனகாலத்தில் சமூக வலைதளங்களின் உதவியோடு திறமையானவர்களை எளிதில் கண்டறிய முடிகிறது.
அந்தவகையில், ஓவர் நைட்டில் இந்தியாவின் உசைன் போல்ட் ஆனவர் மங்களூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா. தமிழ்நாட்டிற்கு ஜல்லிக்கட்டு பாரம்பரியமான விளையாட்டு என்றால் கர்நாடவிற்கு கம்பாளா. எருமை மாடுகளை கயிற்றில் பூட்டி, அக்கயிரை கையில் பிடித்துகொண்டு வீரர்கள், மாடுகளை சேற்றில் விரட்டி செல்ல வேண்டும்.
அதிவேகமாக எல்லைக் கோட்டை கடந்த மாடுகளுக்கும் அதனை ஓட்டி செல்லும் வீரனுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்நிலையில், தென் கன்னட மாவட்டத்தின் கிராமமான மூடபத்ரியில் நடந்த இப்போட்டியில் ஸ்ரீநிவாச கவுடா தனது எருமை மாடுகளுடன் போட்டி தூரமான 142.5 மீட்டர் தூரத்தை 13.42 விநாடிகளில் ஓடி சாதனை புரிந்தார்.
100 மீட்டர் பந்தய தூரத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர், மின்னல் உள்ளிட்ட பெயர்களை தனதாக்கியவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஆனால், ஸ்ரீநிவாச கவுடா 100 மீட்டர் தூரத்தை கடக்க 9.55 விநாடிகள் மட்டுமே எடுத்துகொண்டார்.
ஸ்ரீநிவாச கவுடாவின் இந்த மின்னல் வேக ஓட்டத்திறன் சமூக வலைதளங்களின் வாயிலாக மத்திய விளையாட்டு அமைச்சர் கிரெண் ரிஜிஜூ கண்களில் பட்டது. இதையடுத்து, ஸ்ரீநிவாச கவுடாவுக்கு ஓட்டப்பந்தய சோதனை நடத்தப்படும் என்றும், இந்தியாவில் உள்ள திறமைமிக்க விளையாட்டு வீரர்களை தான் ஒருபோதும் தவறவிடமாட்டேன் எனவும் அவர் ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.
மேலும், ஸ்ரீநிவாச கவுடாவிற்கு சிறந்த பயிற்சியாளர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்படும். பிரதமர் மோடியும், தானும் இந்தியாவில் உள்ள திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிய தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம் என்றும் பதிவிட்டிருந்தார்
இந்நிலையில், தான் உசைன் போல்ட் உடன் ஒப்பிடப்படுவது குறித்து ஈடிவி பாரத்திற்கு ஸ்ரீநிவாச கவுடா பிரேத்யேகமாக பேட்டியளித்தார். அதில், "நான் 2012ஆம் ஆண்டிலிருந்து இந்த (கம்பாளா) போட்டியில் பங்கேற்றுவருகிறேன். 2013இல் மங்களூருவில் நடந்த இந்த விளையாட்டில் நான் முதலிடம் பிடித்தேன். இம்முறை மக்கள் என்னை உசைன் போல்ட் உடன் ஒப்பிடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், அவர் உலக சாம்பியன்.
அவரை போல என்னால் பந்தைய களத்தில் வேகமாக ஓட முடியாது. அதேபோல அவரால் என்னை போன்று சேற்றில் வேகமாக ஓட முடியாது. அவர் தடகள போட்டி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர். நான் கம்பாளா போட்டி மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றுள்ளேன். எனது வெற்றிக்கு எனது எருமை மாடுகளே காரணம். அது வேகமாக ஓடியதால்தான் என்னால் வேகமாக ஓட முடிந்தது" என்றார்.
சேற்றிலும் சகதியிலும் ஓடிய இவரது கால்கள் ஓட்டப்பந்தயத்திலும் ஓடி சாதனை புரியுமா என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: உசேன் போல்ட் என்னும் சாகசக்காரன்...!