இங்கிலாந்து: 72 நாடுகள் பங்கேற்ற 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்றது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய தொடர், மொத்தம் 11 நாட்கள் நடந்தது.
அடுத்து ஆஸ்திரேலியாவில்: இறுதிநாளான நேற்று (ஆக. 8), ப்ரமிங்ஹாமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் வாணவேடிக்கையுடனும், கலைநிகழ்ச்சிகளுடனும் காமன்வெல்த் தொடர் நிறைவு பெற்றது.
காமன்வெல்த் 2022 தொடரின் கொடி இறக்கப்பட்டு, அடுத்த காமன்வெல்த் தொடர் நடைபெறும் ஆஸ்திரேலியாவிடம் (விக்டோரியா) கொடி ஒப்படைக்கப்பட்டது. விக்டோரியா காமன்வெல்த் தொடர் 2026ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாமில் இந்தியா: காமன்வெல்த் 2022 தொடரில் இந்தியா சார்பாக 16 விளையாட்டுகளில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் பங்கேற்றனர். மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், லான் பால், கிரிக்கெட், ஹாக்கி என இந்தியா பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடி தனது முத்திரையை பதித்தது. குறிப்பாக, மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட 12 பேரும் பதக்கங்களை (6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம்) பெற்றனர். பளு தூக்குதலில் மட்டும் இந்தியா 10 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது.
லான் பால் என்னும் இந்தியாவில் பெரிதாக அறிமுக இல்லாத விளையாட்டின் மகளிர் அணி தங்கமும், ஆடவர் அணி வெள்ளியும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டில் முதன்முறையாக சேர்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்று அசத்தியது. ஹாக்கியில் மகளிர் அணி வெண்கலமும், ஆடவர் அணி வெள்ளியும் பெற்றன.
2022 பதக்கப்பட்டியல்: காமன்வெல்த் 2022 தொடரில் இந்தியா மொத்தம் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4ஆவது இடத்தில் நிறைவு செய்தது. பதக்கப்பட்டியலில், ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்திலும், தொடரை நடத்திய இங்கிலாந்து 175 பதக்கங்களுடன் (56 தங்கம், 65 வெள்ளி, 53 வெண்கலம்) 2ஆம் இடத்திலும், கனடா 92 பதக்கங்களுடன் (26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம்) 3ஆம் இடத்திலும் நிறைவு செய்தன. தொடரில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை பெற்றுள்ளன. மால்டா, நவ்ரு, நியு, வனுவாட்டு ஆகிய நாடுகள் தலா 1 பதக்கத்தை பெற்று கடைசி இடத்தில் உள்ளன.
இருப்பினும், கடந்த மூன்று தொடர்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா இத்தொடரில் சற்று குறைவான பதக்கங்களையே பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில்தான் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 101 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. அந்த தொடரில் மொத்தம் 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என பதக்க வேட்டை நடத்தியிருந்தது.
அடுத்த 2014-இல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற தொடரில், இந்தியா 64 பதக்கங்களுடன் (15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம்) 5ஆவது இடத்தையும், 2018 தொடரில் 66 பதக்கங்களுடன் (26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம்) 3ஆவது இடத்தை பிடித்திருந்தது. கடந்த முறையுடன் ஒப்பிட்டால் இந்தியா தற்போது 5 பதக்கங்களை குறைவாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் தங்கம் வென்றவர்கள்
- மீராபாய் சானி - பளு தூக்குதல்
- ஜெர்மி லால்ரின்னுங்க - பளு தூக்குதல்
- அச்சிந்தா ஷூலி - பளு தூக்குதல்
- மகளிர் அணி - லான் பால் விளையாட்டு
- ஆடவர் அணி - டேபிள் டென்னிஸ்
- சுதிர் - பாரா பளு தூக்குதல்
- பஜ்ரங் புனியா - மல்யுத்தம்
- சாக்ஷி மாலிக் - மல்யுத்தம்
- தீபக் புனியா - மல்யுத்தம்
- ரவிகுமார் தஹியா - மல்யுத்தம்
- வினேஷ் போகட் - மல்யுத்தம்
- நவின் - மல்யுத்தம்
- நிது கங்காஸ் - குத்துச்சண்டை
- அமித் பாங்கல் - குத்துச்சண்டை
- எல்தோஸ் பால் - தடகளம்
- நிகத் ஜரீன் - குத்துச்சண்டை
- சரத் கமல்/ஸ்ரீஜா அகுலா - டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்
- பிவி சிந்து - பேட்மிண்டன்
- லக்ஷயா சென் - பேட்மிண்டன்
- சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி / சிராக் ஷெட்டி - பேட்மிண்டன்
- சரத் கமல் - டேபிள் டென்னிஸ்
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா: இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் கூட்டமைப்புதான், காமன்வெல்த் என்று அழைக்கப்படுகிறது. 1930ஆம் ஆண்டில் இருந்து நடைபெறும் இத்தொடர், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இரண்டாம் உலகப்போரினால், 1938-க்கு பின் 12 ஆண்டுகள் கழித்து 1950ஆம் ஆண்டுதான் மீண்டும் காமன்வெல்த் தொடர் நடத்தப்பட்டது.
இதில், இந்திய 1930, 1950, 1962, 1986 ஆகிய தொடர்களில் பங்கேற்கவில்லை. இந்தியா விடுதலையடைவதற்கு முன்னர், பிரிட்டிஷ் இந்தியா சார்பில் இரண்டு தொடர்களில் (1934, 1938) பங்கேற்று, இரண்டு பதக்கங்களை (1 வெள்ளி, 1 வெண்கலம் - 1934) பெற்றிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுகளில் மொத்தம் 19 தொடர்களில் விளையாடியுள்ள இந்தியா 203 தங்கம், 190 வெள்ளி, 171 வெண்கலம் என 564 பெற்று, ஒட்டுமொத்த தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: 10-வது சுற்றில் இந்தியாவின் வெற்றி!