21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஜுலை 17ஆம் தேதி தொடங்கியது. சூப்பர் 8 லீக் போட்டிகளிலே இந்தியாவின் ஆண்கள் மற்றும் மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி அரையிறுதிக்குள் நுழைந்தன. அந்த போட்டிகளிலும் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளை 3-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால் பதித்தன.
தொடர்ந்து ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற சிங்கப்பூர் மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி அரையிறுதியிலே வெளியேற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய ஆண்கள் அணியின் வீரர்கள் சரத் கமல் மற்றும் சத்தியன் தங்களுடைய முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும், மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இறுதியில் இந்திய ஆண்கள் அணி, 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மற்றொரு இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதியது. இதில், இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை தோற்கடித்து காமன்வெல்த் போட்டி வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.