விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு குத்துச்சண்டை வீரர்களான விகாஸ் கிருஷ்ணன், அமித் பங்கல் ஆகியோரின் பெயர்களை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அதேபோல் 2018ல் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதுமட்டுமின்றி காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தார்.
மறுமுனையில் 28 வயதான விகாஸ் கிருஷ்ணன், அமித் பங்கலைக் காட்டிலும் ஓரளவிற்குத் அனுபவம் பெற்ற வீரராக திகழ்கிறார். 2018 இல் நடைபெற்ற ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இவர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜப்பானின் செவான் ஒகாஸ்வாவை வீழ்த்தி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார். விஜேந்தர் சிங்கையடுத்து ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் மூன்று முறை தகுதிபெற்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
இவர் ஏற்கனவே 2012ல் அர்ஜுனா விருது பெற்றிருந்தார் என்பது கவனத்துக்குரியது.
அதேபோல் இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்களான சிம்ரன்ஜித் கவுர், மணிஷ் கவுசிக், லோவ்லினா ஆகியோரின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.