கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுச் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதை, சிறந்த விளையாட்டு வீரர் மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்குவது பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளனர்.
தயான்சந்த் ஹாக்கியில் மிகச்சிறந்து விளங்கியவர், அதனால் இவர் ஹாக்கி ஜாம்பவான் என அழைக்கப்படுகிறார். 1928, 1932, 1936 ஆம் ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்கு மிக முக்கிய பங்குவகித்தவர். இவரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஹாக்கி ஜாம்பவான் பெயரில் விருது
முன்னாள் தடகள வீராங்கனையும், கேல் விருது பெற்றவருமான அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், " தயான் சந்த் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு ஹீரோ, ஹாக்கி ஜாம்பவான், ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.
41 வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா பதக்கம் வென்ற நிலையில், நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருது தயான் சந்த் பெயரில் வழங்குவது மிகவும் பொருத்தமானது" எனத் தெரிவித்துள்ளார்.
தாமதமாக கிடைத்த அங்கீகாரம்
இந்த அங்கீகாரம் தாமதமாக கிடைத்தாலும், இது ஒரு சிறந்த முடிவு என்று முன்னாள் ஹாக்கி கேப்டன் அஜித்பால் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் "பிரதமர் மோடியின் இந்த முடிவு வரவேற்கதக்கது. விளையாட்டு விருதுகள் எப்போதும் விளையாட்டு வீரர்களின் பெயரில் இருக்க வேண்டும். தயான் சந்த் மிகச் சிறந்த வீரர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டும் போதாது
குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், "தயான் சந்தை கவுரவப்படுத்தும் விதமாக, இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டின் விளையாட்டுத் தரத்தை உயர்த்த இது மட்டும் போதாது.
இந்த முடிவுக்கு எதிராக கூறவில்லை. தயான் சந்த்யின் மகத்தான பங்களிப்பை எப்போதும் மதிக்கிறோம். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு மேலும் உதவ வேண்டும். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை. நாம் அதை செய்யாமல், விருதுகளுக்கு பெயர் மாற்றம் செய்வது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது " என்று கூறியுள்ளார்.
தயான் சந்த் பலருக்கு உத்வேகம்
"தயான் சந்தின் வாழ்க்கை, அவரது சாதனைகள் பல தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கும் உத்வேகம் அளித்து, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது" என்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள், பெண்கள் ஹாக்கி அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்ற நிலையில் இந்த பெயர் மாற்றம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - பிரதமர் மோடி