ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், அரையிறுதிக்கு முன்னேறும் வீரர், வீராங்கனைகள் டோக்கியோவில் வரும் ஜூலை இறுதியில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவர்.
அந்த வகையில், இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கி.கி.), வீரர் விகாஸ் கிருஷ்ணன் (69 கி.கி.) ஆகியோர் இதன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்கனவே பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆசிஷ் குமார், இந்தோனேசியாவைச் சேர்ந்த மைக்கேல் முஸ்கிட்டாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆசிஷ் குமார் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோல, மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மஃப்துனகோன் மெலிவாவை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதன்பின், ஆடவர் 91 கிலோ எடைப்பிரிவுகளில் இந்திய வீரர் சதீஷ் குமாரும் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலிய வீரர் டெய்வி ஓட்கன்பாயரை (Daivii Otgonbayar) வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்ற பூஜா ராணி, விகாஸ் கிருஷ்ணன் வரிசையில் தற்போது ஆசிஷ் குமார், லோவ்லினா, சதீஷ் குமார் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கைப் பயணம்!