கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டிசிஎஸ் வேர்ல்ட் 10கே மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டிற்கான டிசிஎஸ் வேர்ல்ட் 10கே போட்டி டிசம்பர் 20ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான மாரத்தான் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த ஐந்துமாத கர்ப்பிணியான அங்கிதா கவுர் பங்கேற்றார். இவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை 62 நிமிடத்தில் கடந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.
'சாதிப்பதற்கு தாய்மை தடையில்லை'
இதுகுறித்து கூறிய அங்கிதா கவுர், "கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தினசரி காலை வேளையில் நான் பயிற்சி எடுத்துவருகிறேன். அதனால் ஓடுவது எனது சுவாசம் போன்றது, இது எனக்கு இயல்பான ஒன்றுதான்.
வெளிப்படையாக கூறவேண்டும் எனில் கர்ப்ப காலத்தில் ஓடுவது நல்ல ஒரு உடற்பயிற்சி. அமெரிக்க சுகாதார கவுன்சிலும் இதனை உறுதிச் செய்துள்ளது. அவர்களும் கர்ப்ப காலங்களில் ஓட்டப்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. எனவே தான் நான் இந்தப் போட்டியில் பங்கேற்றேன்.
இதற்கு முன் இதே போட்டிக்களில் பங்கேற்று நான் பதக்கங்களையும் வென்றுள்ளேன். ஆனால் இம்முறை நான் கர்ப்பமாக இருப்பதால், மாரத்தான் போட்டியின் முதல் 5 முதல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நான் மெதுவாக ஓடியும், நடந்தும் சென்றேன். அதனால் இம்முறை என்னால் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியாமல் போனது" என்று தெரிவித்தார்.
குடும்பத்தின் ஆதரவு:
பின்னர் அவரது குடும்பத்தினரின் அதரவு குறித்து பேசிய அங்கிதா கவுர், "ஆரம்பத்தில் என் அம்மாவுக்கு இப்போட்டியில் நான் பங்கேற்பது குறித்த கவலை இருந்தது. பின்னர் மருத்துவர் என்னை இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தைத் தொடர்ந்து என் அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார்.
அதேபோல் தான் என் அப்பாவும் அவர் ஆரம்பத்திலிருந்தே என்னை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்து வந்தவர். ஏனெனில், அவரும் ஒரு விளையாட்டு வீரராக இருந்தவர். அதனால் இப்போட்டியில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் என்றதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
எனது கணவரும் எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் மருத்துவரிடன் பரிசோதனைக்கு சென்றபோது அவரும் என்னுடன்தான் இருந்தார். அவருடைய ஆதரவும் எனக்கு இப்போட்டில் பங்கேற்க உறுதுணையாக இருந்தது. அந்த வகையில் இப்படி ஒரு குடும்பம் அமைந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றுதான் கூறவேண்டும்" என்று தெரிவித்தார்.
35 வயதான அங்கிதா கவுர் பொறியாளராக பணியாற்றிக் கொண்டே கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து டிசிஎஸ் வேர்ல்ட் 10கே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். பெர்லின் மாரத்தான், பாஸ்டன் மாரத்தான், நியூயார்க் மாரத்தான் போன்று 6க்கும் மேற்பட்ட சர்வதேச மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க:பீலேவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி!