கரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக இந்தாண்டு அக்டோபர் மாதம், கோவாவில் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, இந்தாண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது இயலாது எனத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இத்தகவலை உறுதிபடுத்தும் வகையில், கோவாவின் துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான மனோகர் அஜ்கோங்கர், கோவா தேசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கோவாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்க, தேசிய விளையாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் மீண்டும் இப்போட்டிகளுக்கான தேதிகளை நான்கு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 35ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள், கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்றது. அதனையடுத்து 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் முதலில் 2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக அத்தொடர், இந்தாண்டு கோவாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான்...!