உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறவிருந்த கோடைக்கால ஒலிம்பிக் தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த நடப்பு சீசனுக்கான ஆஸ்திரேலியன் கிராண்ட்ப்ரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தயத் தொடர், கரோனா வைரஸ் தொற்று பரவலால் ரத்து செய்யப்பட்டன. இதுவரை, இந்த வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஒன்பது ஃபார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பு சீசனுக்கான போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக, ஃபார்முலா ஒன் நிர்வாக இயக்குனர் ரோஸ் பிரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தச் சூழலில் போட்டிகளில் பங்கேற்பதற்காக அணி வீரர்கள், போட்டி ஒருங்கினைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.
இருப்பினும், விரைவில் இந்தத் தொடரை நடத்துவதில்தான் எங்களது கவனம் உள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் இருந்து இந்தத் தொடரை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தனி விமானத்தில் வரும் வீரர்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஃபார்முலா ஒன் ரேஸுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால், தற்போதையச் சூழலில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாகதான் இருக்கின்றது. இருப்பினும், நடப்பு சீசனுக்கான ஃபார்முலா ஒன் போட்டிகளை நடத்துவதற்கு இதை விட்டால் வேறு வழி இல்லை" என்றார்.
நடப்பு சீசனுக்கான பிரெஞ்சு கிராண்ட்ப்ரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தயப் போட்டி, பாரிஸில் வரும் ஜூன்-28 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தொற்று முன்னாள் ஐஸ் ஹாக்கி வீரர் உயிரிழப்பு!