2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கவிருந்த நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் ஒலிம்பிக் நடந்தாலும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் என்றே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஹாக்கி அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, ஜப்பான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஜூலை 24ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி நியூசி.யை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும், ஜூலை 27ஆம் தேதி ஸ்பெயினையும், ஜூலை 29ஆம் தேதி அர்ஜெண்டினாவையும், ஜூலை 30ஆம் தேதி ஜப்பானையும் எதிர்கொள்கிறது.
இதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. மகளிரிலும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதில் இந்தியா, நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஜூலை 24ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தையும், ஜூலை 26ஆம் தேதி ஜெர்மனியையும், ஜூலை 28ஆம் தேதி கிரேட் பிரிட்டனையும், ஜூலை 29ஆம் தேதி அர்ஜெண்டினாவையும், ஜூலை 30ஆம் தேதி ஜப்பானையும் எதிர்கொள்ளவுள்ளது.
ஆடவருக்கான காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 1, 3, 5 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும், மகளிருக்கான காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 6 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆடவர் அணி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ராணி ராம்பால் தலைமையிலான மகளிர் அணி ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்ல முனைப்புடன் செயல்பட்டு வருவதால், மகளிர் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட அதே மைதானங்களிலேயே போட்டிகள் நடக்கும் என சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று ரஞ்சி போட்டிகள் போதும் இந்திய அணிக்கு களமிறங்கி ரன்கள் அடிக்க - கங்குலி!