மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி 3-0, 5-0 என வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி 4-4 என டிராவானது. நான்காவது போட்டியில் 1-0 என இந்தியா வெற்றிப் பெற்ற நிலையில், ஐந்தாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி, 35ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் முதல் கோலை அடித்தார். இதனையடுத்து முதல் பாதி நேர முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன் பிறகு, நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால், மலேசியா அணி இந்திய அணியின் அபார ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்காததால், இந்திய அணி 1-0 என வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்டத் தொடரை இந்திய அணி 4-0 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.