கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் உள்பட உலகின் அனைத்து வகையான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில தினங்களாக பண்டஸ்லிகா உள்ளிட்ட கால்பந்து தொடர்கள் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டுவருகின்றன.
இதேபோல், சர்வதேச ஹாக்கிப் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தற்போது இருக்கும் சூழ்நிலையில் சர்வதேச போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றதாகும். மேலும், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைக் கடைப்பிடித்து தங்களது பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, சர்வதேச போட்டிகள் நடப்பது குறித்து ஆலோசிக்க முடியும்.
அதேபோல் ஒருவேளை பார்வையாளர்களின்றி ஹாக்கிப் போட்டிகளை நடத்தினாலும், முதலில் கான்டினென்டல் தொடர்களையும், அருகில் உள்ள நாடுகளுக்கு இடையிலான தொடர்களையும் மட்டுமே நடத்த இயலும்.
கரோனா பெருந்தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த பின்பு வேண்டுமானால் சர்வதேச போட்டிகளை நடத்தலாம்.
அப்படி நடத்தப்படும் தொடர்களும் ஒரு மாறுபட்ட ஆட்டத்தைக் கொண்டதாக அமையும். மேலும் போட்டிகள் மீண்டும் தொடங்கும்பட்சத்தில் ஊழியர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரீமியர் லீக் கிளப் அணி வீரர்கள் உள்பட 6 பேருக்கு கரோனா!