ஹாக்கி ஜாம்பவான் இளம் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம், நானாஜி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் பல்பிர் சிங் (96). இவர், கடந்த 8ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மொகாலியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்” என்று மருத்துவர் கபீர் கூறினார். கடந்தாண்டு ஜனவரியில், பல்பிர் சிங்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் பல்பிர் சிங், இல்லாமல் இந்திய வரலாற்றை எழுத முடியாது. ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஒரு நபர் அடித்த அதிகபட்ச கோலாக பல்பிர் சிங்கின் உலக சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை.
1952 நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆறு கோல்கள் அடித்து போட்டியை வென்றது. இதில் 5 கோல்கள் பல்பிர் சிங் அடித்தது. இவருக்கு 1957ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.