ஆறு நாடுகள் பங்கேற்று விளையாடிவரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு டிரா என இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக இந்திய அணி கனடாவை எதிர்த்து விளையாடிய போட்டியில் 7-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
இதனையடுத்து இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் இந்திய அணி போலந்து அணியுடன் மோதவுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில், இளம் வீரர்களுடன் களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. அதிலும் இந்திய வீரர் வருண் குமார் மற்றும் மந்தீப் சிங் இந்த தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ஐந்து கோல்களுடன் மந்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார்.
போலந்து அணியைப் பொறுத்தவரையில், நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே, இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு போலந்து அணியுடனான போட்டி மிகச்சிறந்த பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.