கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பெருந்தோற்றின் அச்சுறுத்தலால் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளுக்குத் திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதியளித்திருந்தது.
இதனையடுத்து ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பெங்களூருவிலுள்ள இந்திய விளையாட்டு அமைச்சக மையத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் பயிற்சியை மேற்கொள்ளவிருந்தனர். பயிற்சி மையத்திற்கு வருகை தந்த வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பீரித் சிங் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜாஸ்கரன் சிங், வருண் குமார், கோல் கீப்பர் கிரிஷன் பகதூர் பதக் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.