எஃப்ஐஹெச் ப்ரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியம் அணியை எதிர்த்து, இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இந்த ஆட்டத்தின் முதல் குவார்ட்டரின் 2ஆம் நிமிடத்திலேயே இந்திய அணியின் மன்தீப் சிங் முதல் கோலை அடித்து, அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். அதன்பின் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளிலும் பெல்ஜியம் அணியை கோல் அடிக்கவிடாமல், இந்திய தடுப்பாட்ட வீரர்கள் தடுத்தனர். தொடர்ந்து நடந்த இரண்டாவது குவார்ட்டரில் பெல்ஜியம் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் ஆட்டத்தில் இந்திய அணியின் கை ஓங்கியது.
இதையடுத்து நடந்த மூன்றாவது குவார்ட்டரின் தொடக்கத்திலேயே பெல்ஜிய அணி வீரர் பொக்கார் கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தன. இதனால் ஆட்டம் பரபரப்பானது. அதையடுத்து 6 நிமிடங்களுக்குப் பின், இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அது மூன்றாவது நடுவரிடம் செல்ல, அந்த வாய்ப்பினை மூன்றாவது நடுவர் நிராகரித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் மூன்றாவது குவார்ட்டர் முடிவுக்கு வந்தது.
ஆனால், நான்காவது குவார்ட்டரின் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனைப் பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் டிராக் ப்ளிக் செய்து, கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால், அது கோல்கீப்பர் விக்டரின் கால்களில் பட்டு, இந்தியாவின் ராம்நதீப் கைகளில் சிக்க, இந்திய அணி இரண்டாவது கோலை அடித்து அசத்தியது.
அதையடுத்து பெல்ஜியம் அணி அடுத்தடுத்து இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பைப்பெற்றது. ஆனால், இந்திய அணியின் ஸ்ரீஜீஷ் எளிதாகத் தடுத்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலக சாம்பியனான பெல்ஜியம் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை சிறப்பாக எதிர்கொண்டு தடுத்த, இந்திய கோல்கோப்பர் க்ரிஷன் பதக் ஆட்டநாயகன் விருதினை வென்றார். எஃப்ஐஹெச் ப்ரோ லீக் தொடரின் இந்திய அணி பெறும் மூன்றாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.எஸ்.எல். கால்பந்து: ராய் கிருஷ்ணா ஹாட்ரிக், ஃபிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்திய ஏடிகே!