இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பல்பீர் சிங். இவரின் அசத்தலான ஆட்டத்தால் 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுத் தொடரில் இந்திய அணிக்குத் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்நிலையில், 95 வயதான பல்பீர் சிங் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இருந்தபோதும், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காலமானார்.
அவரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு எனப் பல்வேறு தரப்பினரும் ட்விட்டர் வாயிலாக தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப் மாநில அரசுகளின் மரியாதையுடன் சண்டிகர் பகுதியில் உள்ள மின்மயானத்தில் பல்பீர் சிங்கின் உடல் தகனம்செய்யப்பட்டது.
தொடர்ந்து பேசிய பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் ராணா குர்மீத் சிங், "நாங்கள் இன்று (மே 25) எங்களுடைய மிகச்சிறந்த வீரரை இழந்துவிட்டது மட்டுமில்லாமல், எங்களது வழிகாட்டியையும் இழந்துள்ளோம்.
இந்திய ஹாக்கி தனது மிகப்பெரும் ரசிகனை இன்று இழந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. இவரின் சாதனைகளைப் போற்றும்வகையில் மொகாலி மைதானத்திற்கு பல்பீர் சிங்கின் பெயர் சூட்டப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவு!