ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதான கேல் ரத்னா அர்ஜூனா விருது வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி ராம்பாலின் பெயரை ஹாக்கி இந்தியா பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் அர்ஜுனா விருதுக்கு மகளிர் வீராங்கனைகளான வந்தனா கட்டாரியா, மோனிகா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரது பேர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அர்ஜுனா விருதுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறித்து வந்தனா கூறுகையில், "அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் எதிர்வரும் ஆண்டுகளில் எங்களால் சிறப்பாக விளையாட உந்துதலாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
எனக்கு சிறந்த அணி வீரர்கள் கிடைத்ததால் தான் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. அவர்கள் இல்லையென்றால் என்னால் சிறப்பாக விளையாடி இருக்க முடியாது. எனவே எனது ஆட்டத்திறன் அதற்கு முழு காரணமும் எனது அணி வீரர்கள் தான். அதேபோல் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சக வீராங்கனையான மோனிகா மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
அதே சமயம் ராணி ராம்பால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
அதேபோல் இதுகுறித்து மோனிகா கூறுகையில் "முதலில் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வந்தனா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோருக்கும் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேப்டன் ராணி ராம்பாலுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதன்மூலம் அணிக்காக இன்னும் சிறப்பாக விளையாட என்னை ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடி அதே ஆட்டத்திறன் நாங்கள் எதிர் வரும் போட்டிகளில் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.