ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் உள்ளூர் கால்பந்து தொடரான ஆஸ்திரேலியன் ஏ லீக் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்டர்ன் யுனைடெட், வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் சமநிலையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் அணி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். அவர்கள் தொடர்ந்து இருமுறை கோல் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், 79ஆவது நிமிடத்தில் வெஸ்டர்ன் சிட்னி வீரர் நிக்கோல முல்லர் அடித்த கார்னர் கிக்கை ஹெட்டர் முறையில் கோலாக மாற்றினார் பேட்ரிக் ஸிக்லர்.
இதனால் முன்னிலைப் பெற்ற மகிழ்ச்சியில் உள்ளூர் அணியான வெஸ்டர்ன் சிட்னி அணி வீரர்கள் துள்ளிக் குதித்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 87ஆவது நிமிடத்திலேயே வெஸ்டர்ன் யுனைடெட் அணி வீரர் ஆரன் கால்வர் ஹெட்டர் முறையில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் இப்போட்டி டிராவில் முடிவடைந்தது. புள்ளிப்பட்டியலில் யுனைடெட் அணி மூன்றாவது இடத்திலும், வாண்டரர் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: மிஷ்கினின் சைக்கோ வெளிவருவதில் மாற்றம்!