ஜெர்மன் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான பன்டஸ்லீகா தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜன.17) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெயர்ன் முனிச் அணி, எஸ்.சி. ஃப்ரீபர்க் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டி தொடங்கிய 7ஆவது நிமிடத்திலேயே பெயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் எஸ்.சி. ஃப்ரீபர்க் அணியின் பீட்டர்சன் 62ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் தாமஸ் முல்லர் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் பெயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எஸ்.சி. ஃப்ரீபர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பன்டஸ்லீகா கால்பந்து தொடரில் பெயர்ன் முனிச் அணி 36 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இப்போட்டியில் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி கோலடித்ததன் மூலம் இந்த சீசனின் முதல் பாதி ஆட்டத்தில் தனது 21ஆவது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் பன்டஸ்லீகா கால்பந்து தொடரின் ஒரு சீசனின் முதல் பாதி ஆட்டத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
முன்னதாக பெயர்ன் முனிச் அணியின் ஜெர்ட் முல்லர், 1971-72ஆம் ஆண்டு பன்டெஸ்லீகா தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் 20 கோல்களை அடித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர்