கால்பந்து மீது அதிகமான ஈடுபாடு கொண்ட நாடு என்றால் அது அர்ஜென்டினாதான். ஆனால் அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பதில் அர்ஜென்டினாவுக்கு நிகர் அர்ஜென்டினாதான்.
2010ஆம் ஆண்டிலேயே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு திருமணத்தை அங்கீகரித்தது, தனது பால் அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்படுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கியது என அர்ஜென்டினா முற்போக்காகவே செயல்பட்டுவந்துள்ளது. இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாய் ஏ டிவிஷனுக்கான பெண்கள் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்றாம் பாலினத்தவருக்கு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அனுமதியளித்துள்ளது.
அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மாரா கோம்ஸ் (Mara Gomez). திருநங்கையான இவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டதன் காரணமாக சிறுவயதிலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்தத் துன்பமான சூழலிலிருந்து வெளி வருவதற்கு அவருக்கு உதவியாக இருந்தது கால்பந்து மட்டுமே.
சிறுவயதிலிருந்தே கால்பந்தை ஆடும் மாரா கோம்ஸ், 22 வயதில் உள்ளூரில் நடந்துவந்த பெண்கள் கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தார். இதையடுத்து ஏ டிவிஷன் கால்பந்து தொடர்களில் பங்கேற்க அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்திடம் முறையிட்டபோது, சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பின்னர் கால்பந்து சம்மேளனத்தில் ஏ டிவிஷன் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைத்ததையடுத்து, வில்லா சான் கார்லோஸ் என்னும் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாரா கோம்ஸ் பேசுகையில், '' வாழ்க்கையின் முக்கிய நேரத்தில் கால்பந்துதான் எனக்கு முக்கிய நிவாரணியாக இருந்தது. ஏ டிவிஷன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். நன்றாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார். இவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சச்சின் சாதனையை முறியடித்து, சச்சினிடமே வாழ்த்து பெற்ற வீராங்கனை!