ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் (UEFA Champions League) தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள நட்சத்திர கால்பந்து அணியான பார்சிலோனா, இன்டர் மிலன் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே இன்டர் மிலன் வீரர் லாவ்டாரோ மார்டினெஸ் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன் பின் பார்சிலோ அணிக்கு 25ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மெஸ்ஸி அடித்த ஃபிரீ கிக்கை மிலனின் கோல் கீப்பர் சமீர் ஹாண்டானோவிக் எளிதாக தடுத்துவிட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் இன்டர் மிலன் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
பின்னர் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் இருந்தே பார்சிலோனா வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் கோல் அடித்து தனது அணியை 1-1 என சமநிலை பெற வைத்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முற்பட்டனர். அப்போது 84ஆவது நிமிடத்தில் பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி பாஸ் செய்து கொண்டு வந்த பந்தை, சுவாரஸ் மீண்டும் கோலாக மாற்றியதால் பார்சிலோனா அணி 2-1 என முன்னிலை பெற்றது. பின்னர் இறுதி வரை இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை வீழ்த்தியது.
இந்த வெற்றியின்மூலம் நடப்புத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த பார்சிலோனா அணி எஃப் பிரிவில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.