கால்பந்தில் பந்தை பாஸ் செய்தற்கு அல்லது கோல் அடிப்பதற்காக வீரர்கள் தங்களது தலையை பயன்படுத்துவர். அதனை கால்பந்தில் ஹெட்டர் (header) எனக் கூறுவர். இவ்வாறு ஹெட்டர் அடிப்பது, ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பை பெரும்.
இந்த ஹெட்டர் அடிப்பதால் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதில் 1900 முதல் 1976ஆம் ஆண்டு பிறந்த முன்னாள் கால்பந்து வீரர்கள் 7,676 பேரின் மாதிரிகள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. அப்போது ஹெட்டர் அதிகமாக அடித்த முன்னாள் கால்பந்து வீரர்களுக்கு டிமென்ஷியா என்று மூளையில் ஏற்பட்ட பிரச்னையால் 11% பேர் மூன்றரை மடங்கு முன்னதாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி குறித்து ஸ்காட்லாந்து கால்பந்து கழகம் பேசுகையில், ''கால்பந்து வீரர்களுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என தீவிரமாக ஆராயப்பட்டது. அதில் இளைஞர்கள், மாணவர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டது. அதில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள், குழந்தைகள் ஹெட்டர் அடிப்பதற்கு தடை விதிக்கலாம் என விவாதிக்கப்பட்டது'' என்றார்.
இதனிடையே அமெரிக்காவில் குழந்தைகள், மாணவர்கள் ஹெட்டர் அடிப்பதற்கான தடை 2015ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவாதம் பற்றி ஆர்சனல் அணி முன்னணி வீரர் ஜான் ஹாட்ர்சன் பேசுகையில், ''கால்பந்து விளையாட்டில் ஹெட்டர்களை தவிர்ப்பது இயலாத காரியம். ஆனால் முன்னணி வீரர்கள் பலரும் ஹெட்டர்கள் அடிப்பதால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்துள்ளனர். எனவே ஸ்கார்லாந்து கால்பந்து கழகம் ஹெட்டர்களுக்கு தடை விதிப்பதை வரவேற்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
ஹெட்டர்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பு இனும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹோபார்ட் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சானியா மிர்சா ஜோடி