சிலி அணியின் நட்சத்திர கால்பந்து வீரராக வலம் வந்தவர் ரோட்ரிகோ டெல்லோ. இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோவின் நண்பர் ஆவார். இவர், ரொனால்டோவை பிரபல கூடைப்பந்து ஜாம்பவான் ஜோர்டனுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சியில் பேசிய டெல்லோ, “ரொனால்டோவை போல மிகசிறந்த வீரர் இருக்கும் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ரொனால்டோவுக்கு பதினேழு வயது இருக்கும்போது நான் அவருடன் இணைந்து லிஸ்பன் அணிக்காக விளையாடியுள்ளேன்.
அப்போது அவர் மிகவும் கடினமான உழைக்கும் நபராக தோன்றினார். அதன் காரணமாகவே அவர் மிகச்சிறந்த வீரராகவும் திகழ்ந்தார். ஒவ்வொரு போட்டியின் போதும் ரொனால்டோ தனது தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்வர். அப்போது எல்லாவற்றிலும் போட்டியிடும் நபரான மைக்கேல் ஜோர்டானை அவர் எனக்கு நினைவூட்டினார்' என்று தெரிவித்துள்ளார்.
உலகின் தலை சிறந்த கால்பந்து வீரராக வலம்வரும் ரொனால்டோ, போர்ச்சுகல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் இதுவரை 167 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 99 கோல்களை அடித்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.